இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழ வேண்டி வருமென மருத்துவ நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மக்களைக் காப்பதற்கு உள்ள ஒரே வழி தடுப்பூசிதான். அதனை வழங்கும் நடவடிக்கையை அரசு துரிதப்படுத்தியுள்ளது. எனினும், சிற்சில தவறுகளை பெரிதுபடுத்தி மக்களை குழப்புவதற்கு எதிரணி முற்படுகின்றது. இது அரசியல் நடத்துவதற்கான நேரம் அல்ல என்பதை எதிரணி உறுப்பினர்கள் புரிந்து செயற்பட வேண்டும்.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு:
கொரோனா நெருக்கடி நிலைமையால் நாடு என்ற வகையில் எமக்கும் பல சவால்களை சந்திக்க வேண்டியேற்பட்டுள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், சீனா உட்பட உலக நாடுகளிலும் இதே நிலைமை தான் காணப்படுகின்றது. பலம்பொருந்திய நாடுகள்கூட பின்னடைவைச் சந்தித்துள்ளன.
இவ்வாறான நெருக்கடி நிலைமையிலும் நாட்டு மக்களுக்காக முன்னெடுக்கப்பட வேண்டிய அபிவிருத்தித் திட்டங்களையும்,எதிர்கால வேலைத்திட்டங்களையும் செயல்படுத்தி வருகின்றோம். கடந்த வருடம் மார்ச்சில் நாட்டை முடக்கினோம். அதன்பின்னரும் முடக்கப்பட்டது. ஆனால், அவ்வப்போது வைரஸ் தொற்று தலைதூக்கும் அபாயம் காணப்படுகின்றது. அடுத்துவரும் வாரங்கள் அல்ல,அடுத்துவரும் ஒவ்வொரு நாளும் தீர்க்கமானது. மருத்துவ நிபுணர்களின் கூற்றின் பிரகாரம், குறைந்தபட்சம் இன்னும் 2 வருடங்களாவது கொரோனாவுடன்தான் வாழப் பழக வேண்டி வரும்.
எதிர்பாராத விதமாகத்தான் தொற்று நிலை உருவானதுஆனாலும் நாட்டு மக்களுக்காக செய்ய வேண்டியவற்றை நாம் செய்து வருகின்றோம். தற்போதைய சூழ்நிலையில் வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசிதான் ஒரே வழி.அதனைத் துரிதமாக வழங்கி, மக்களை மீட்க நடவடிக்கைஎடுத்து வருகின்றோம்.கொரோனா தொற்று ஏற்பட்டதிலிருந்து எமது நாட்டு சுகாதாரத்துறையினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றனர். பலருக்கு நித்திரை கூட இல்லை. ஆனால், ஒரு சிலரால் இழைக்கப்படும் சிறு தவறைக்கூட பெரிதுபடுத்தி,
நாட்டில் தீ மூட்டி ,மக்களைக் குழப்புவதற்கு எதிரணி முற்படுகின்றது. இது அரசியல் நடத்துவதற்கான நேரம் அல்ல என்பதை எதிர்க்கட்சித் தலைவர் உட்பட எதிரணி அரசியல் பிரமுகர்கள் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு அரசியல் நடத்தலாம். மக்களைக் குழப்ப வேண்டாமெனக் கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.
———————
Reported by : Sisil.L