கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் மக்களவை பொதுத்தேர்தல் மூலம் வெற்றிபெறும் கட்சியின் தலைவர் அந்நாட்டின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
கனடாவில் மொத்தம் 338 மக்களவை தொகுதிகள் உள்ளன. பெரும்பான்மையை நிரூபிக்க ஒரு கட்சி 170 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். 2015ஆம் நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 184 பேர் வெற்றி பெற்றிருந்தனர். 99 இடங்களுடன் கன்சர்வேட்டிவ் கட்சி இரண்டாவது இடத்தையும், 44 இடங்க ளுடன் நியூ டெமாகிரட்டிக் கட்சி மூன்றாவது இடத்தையும் பெற்றிருந்தது.
2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் லிபரல் கட்சியின் சார்பாக போட்டியிட்டவர்களில் 157 பேர் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டாலும் பெரும்பான்மையைப் பெற இயலவில்லை. முக்கியமான சட்டங்களையெல்லாம் எதிர்க்கட்சிகளின் ஆதரவுடனே நிறைவேற்றும் நிலை நீடித்து வந்தது. இந்தச் சூழலில் அண்மையில் நாடாளுமன்றத்தில் விஷமத்தன்மையும், இடையூறும் அதிகமாக இருப்பதாக எதிர்க்கட்சிகளை விமர்சித்தார். இதன் தொடர்ச்சியாக தற்போது, பெரும்பான்மை இடங்களைப் பெற்று ஆட்சியமைப்பதற்காக முன்கூட்டியே தேர்தலை நடத்த ஜஸ்டின் ட்ரூடோ முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ, வரும் ஞாயிற்றுக்கிழமை கவர்னர் ஜெனரலை சந்தித்து ஆட்சியைக் கலைக்க உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்ளவுள்ளதாகவும், தேர்தல் திகதியாக செப்டம்பர் 20ஆம் திகதியை அறிவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தனது ஆட்சிக்காலம் நிறைவடைய இரண்டு வருடங்கள் மீதமுள்ள நிலையில், ஜஸ்டின் ட்ரூடோ இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L