தடுப்பூசி ஏற்றிய அட்டை வைத்திருப்பது கட்டாயம்

கொவிட் தடுப்பூசி ஏற்றியதை உறுதிப்படுத்தும் அட்டையை வைத்திருப்பதை கட்டாயமாக்குவது தொடர்பில் அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்தும் போதும் மற்றும் அரச, தனியார் நிறுவனங்களுக்குள் செல்லும் போதும் குறித்த நபர் தடுப்பூசியைப் போட்டுள்ளாரா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளும் வகையில் அந்த அட்டையை கட்டாயப்படுத்துவதற்கு ஆராயப்படுவதாகக் கூறப்படுகின்றது. எனினும் இதுவரையில் அதனைக் கட்டாயமாக்குவது குறித்து இறுதித் தீர்மானங்கள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆனால் வெகு விரைவில் இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படலாம் என்று தெரிவிக்கப்படுகின்றது. தற்போது தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்படுவதுடன், 30 வயதுக்கும் மேற்பட்ட அனைவரையும் அதனை போட்டுக் கொள்ளுமாறு சுகாதாரத் தரப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். அத்துடன் கொழும்பில் இதுவரையில் ஒரு தடுப்பூசியேனும் போடாதவர்களைக் கண்டறிந்து அவர்களை தடுப்பூசியை போடச் செய்யும் வேலைத்திட்டத்தை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர். இதேவேளை வெளிநாடு செல்லும் நபர்கள், இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்டிருந்தால் அதனை உறுதிப்படுத்தும் சான்றிதழை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும். சுகாதார அமைச்சினால் குறித்த சான்றிதழ் விநியோகிக்கப்படுகின்றது. தனது வெளிநாட்டு கடவுச்சீட்டின் பிரதி, தான் தடுப்பூசி பெற்றுக்கொண்ட மைக்கான அட்டையின் பிரதி ஆகியவற்றை சுகாதார அமைச்சின் மின்னஞ்சலுக்கு அனுப்புவதன் மூலம் அந்தச் சான்றிதழைப் பெற்றுக்கொள்ள முடியுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.


————-

Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *