நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துச் செல்லும் நிலையில் பிரதான வைத்தியசாலைகளின் பிரேத அறைகளில் சடலங்கள் குவிந்து வருவதால் இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
குறிப்பாக களுத்துறை, பாணந்துறை மற்றும் ராகம வைத்திசாலைகளில் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அங்கு பிரேத அறைகளில் போதுமான இடவசதி மற்றும் குளிரூட்டி வசதிகள் இல்லாமையால் அறைக்கு வெளியேயும் பாதுகாப்புக் கவசங்களுடன் பொதி செய்யப்பட்ட நிலையில் உடல்கள் வைக்கப்பட்டிருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.இந்த வைத்தியசாலைகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான சடலங்களை வைக்கக் கூடிய வசதிகளே இருக்கின்றன. ஆனால் கடந்த சில நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் 50 க்கும் மேற்பட்டவர்களின் சடலங்களை வைக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.
கொரோனா தொற்றுக் காரணமாக உயிரிழந்தவர்களின் சடலங்கள் களுத்துறை பொது வைத்தியசாலை மற்றும் பாணந்துறை ஆதார வைத்தியசாலைகளில் குவிந்துள்ளன.
இந்தச் சடலங்களைத் தகனம் செய்ய ஆரம்பித்துள்ளதாக களுத்துறை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் உதய ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் தகனம் செய்வதற்கு தாமதமாகியுள்ள 26 கொவிட் சடலங்களையும் துரிதமாக மஹர, வத்தளை, பியகம, ஜாஎல, கட்டான மற்றும் நீர்கொழும்பு ஆகிய நகர சபை மற்றும் பிரதேசசபைக்குட்பட்ட பகுதிகளிலுள்ள தகன சாலைகளுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சில உடல்களை பொறுப்பேற்பதற்கு உறவினர்கள் வராத காரணத்தினால் அவற்றை தொடந்தும் அங்கு வைத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இறந்தவர்களின் உறவினர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருத்தல் அல்லது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதன் காரணத்தினால் அந்த உடல்கள் பொறுப்பேற்கப்படாது அங்கிருப்பதாக கூறப்படுகின்றது. அத்துடன் குளிரூட்டி இன்றி வெளியே வைக்கப்படும் உடல்கள் பழுதடையும் நிலைக்குச் செல்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் கூடிய விரைவில் அந்த உடல்களை எரிக்க அல்லது அடக்கம் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் ஆரம்பித்துள்ளனர். இதன்படி இந்த விடயத்தில் இராணுவத்தினரின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையும் நாளாந்தம் அதிகரித்துச் செல்லும் நிலையில் நாட்டின் பிரதான வைத்திசாலைகளிலுள்ள கொவிட் சிகிச்சை வார்ட்டுகளில் இடப்பற்றாக்குறை நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் தொற்று அறிகுறிகள் அற்ற நோயாளர்களை வீடுகளில் வைத்து சிகிச்சையளிக்கும் நடவடிக்கைகளை இன்று முதல் ஆரம்பிப்பதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
————-
Reported by : Sisil.L