தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தின் அன்னதான மடமொன்று நேற்று சுகாதாரப் பிரிவினரால் சீல் வைக்கப்பட்டது. மோகன் மடத்தில் சுகாதார விதிமுறைகளை மீறியும், யாசகர்களுக்கு உணவளிக்க வழங்கப்பட்ட சிறப்பு ஏற்பாட்டை துஷ்பிரயோகம் செய்தும் அன்னதானம் வழங்கியதால் அன்னதானமடம் ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்தில் தங்கியுள்ள யாசகர்களுக்கு பொதி செய்யப்பட்ட உணவை வழங்க மோகன் அன்னதான மடத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.எனினும், நேற்று வெள்ளிக்கிழமை ஆலயத்தில் பெருமளவான பக்தர்கள் வந்ததுடன், மோகன் மடத்தில் அன்னதானத்தில் கலந்து கொண்டனர்.
தகவலறிந்து பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் சுகாதாரப் பரிசோதகர் ஆ.ஜென்சன் ரொனால்ட் தலைமையில் சுகாதாரப் பிரிவினர்,பொலிஸார் அங்கு சென்றனர். இதன் போது முகக்கவசம் அணியாமல், சுகாதார விதிகளைப் பேணாமல் பலர் கலந்து கொண்டிருந்தமைஅவதானிக்கப்பட்டது.இதனடிப்படையில் மோகன் மண்டபம் எதிர்வரும் 20ஆம் திகதி வரை- 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், ஆலயத்தில் தங்கியுள்ள யாசகர்களுக்கு உணவளிக்கும் பொறுப்பு வேறொரு மண்டபத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.
Reported by : Sisil.L