இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்து வருவதற்கு உரிய காரணங்களை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா விவரித்து, எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா இரண்டாவது அலை நாடு முழுதும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கடந்த சில நாட்களாக நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலேரியா கூறுகையில், “கொரோனா வைரஸ் பரவல் கடந்த மாதத்தில் வெகுவாகக் குறைந்து வந்தது. இதனால், வைரஸ் ஒழிக்கப்பட்டு விட்டதாக நினைத்து மக்கள் மலைப் பிரதேசங்கள் உள்ளிட்டவற்றுக்கு சுற்றுலா சென்று வருகின்றனர்.
ஹிமாச்சலப் பிரதேசம், உத்தரகண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள சுற்றுலாத் தலங்களில் மக்கள் கூட்டம் திடீரென அதிகரித்தது. வழக்கமாக கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்று வாரங்களுக்குப் பிறகே தெரியவரும். அதன்படி தற்போது நாடு முழுதும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
முககவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததே தற்போதைய இந்தத் திடீர் பரவலுக்குக் காரணம். எனவே தான், மக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகள், விழாக்கள் உள்ளிட்டவற்றை தவிர்க்க வேண்டும் என தொடர்ந்து கூறி வருகிறோம்.
இந்த ஆண்டு இறுதிக்குள் 108 கோடி பேருக்கு தடுப்பூசி வழங்குவது என்ற மத்திய அரசின் இலக்கு தற்போதும் சாத்தியமே. பல புதிய தடுப்பூசிகள் கிடைக்கவிருப்பதால், இந்த இலக்கை நம்மால் எட்ட முடியும். தற்போதைய சூழ்நிலையில் தடுப்பூசி மட்டுமே கொரோனாவுக்கு எதிரான ஆயுதமாக இருக்கிறது. அதனால் அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும்.
இரண்டு டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டவர்களுக்கு மூன்றாவதாக பூஸ்டர் வழங்கப்பட வேண்டும் என சிலர் கூறுகின்றனர். ஆனால் இது அவசியமா என்பது இதுவரை நிரூபிக்கப்படவில்லை. உலகம் முழுதும் அனைவருக்கும் தடுப்பூசி கிடைத்தால் மட்டுமே கொரோனாவை விரட்ட முடியும். சீனாவை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். அங்கே தற்போது மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது” என்றார் குலேரியா.
Reported by : Sisil.L