கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனையில் அதிகரித்துள்ள போதை வியாபாரம், போதைப் பாவனையைக் கட்டுப்படுத்தக் கோரி பிறைந்துறைச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த பொது மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் இன்று (15) ஈடுபட்டனர். பிறைந்துறைச்சேனை பிரதேசத்திலிருந்து ஆரம்பமான ஆர்ப்பாட்டக்காரர்கள் நடை பவனியாக வாழைச்சேனை பிரதான வீதியூடாக வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தின் முன்னாலும் போதைக்கெதிராக பதாகைகளை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒரு சிலரின் நடவடிக்கையினால் முழுப்பிரதேசத்துக்கும் அவப்பெயர் ஏற்பட்டு வருவதுடன், போதையைக் கட்டுப்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் கோரிக்கை விடுத்தனர்.
போதை வியாபாரத்தில் ஈடுபடுவோர் மற்றும் அதனைப் பாவிப்போருக்கெதிராக சட்ட நடவடிக்கை மேற்கொண்டு போதையை இப்பிரதேசத்திலிருந்து இல்லாமல் செய்யுமாறு கோரி வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் மகஜரும் கையளிக்கப்பட்டது.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், சிறுவர்களும் கலந்து கொண்டு போதைக்கு எதிரான தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
—————————
Reported by : Sisil.L