ஹெய்ட்டி நாட்டின் ஜனாதிபதி நேற்று சுட்டுக்கொல்லப்பட்டார். சுட்டவர்களில் நான்கு பேரை பாதுகாப்புப் படையினர் சுட்டுக்கொன்றனர். இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தென்அமெரிக்கா- வட அமெரிக்கா கண்டத்துக்கு மத்தியில் ஹெய்ட்டி என்ற தீவு நாடு அமைந்துள்ளது. இதன் ஜனாதிபதியாக ஜோவெனல் மாய்சே பதவி வகித்தார். கடந்த பெப்ரவரி மாதம் அவரது பதவிக்காலம் முடிந்து விட்டது. ஆனால் ஒரு ஆண்டு காலம் பதவியில் நீடிக்கப்போவதாக அறிவித்திருந்தார். இதனால் எதிர்க்கட்சிகள் அவருக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்தன. இந்த நிலையில் அவரது வீட்டுக்குள் புகுந்த ஆயுதக் கும்பல் ஒன்று திடீரென துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியது. அப்போது உள்ளே இருந்த ஜனாதிபதி ஜோவெனல் மாய்சேவை அவர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். அவரது மனைவி மார்ட்டின் மாய்சேவையும் சுட்டனர். அவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஜனாதிபதி கொலை செய்யப்பட்டதால் அந்நாட்டில் பதற்றம் ஏற்பட்டது. இதற்கிடையே துப்பாக்கிச் சண்டை நடத்தியவர்களை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். அவர்களில் 4 பேரை சுட்டுக் கொன்றனர். 2 பேரை கைது செய்தனர்.
இதற்குப் பின்னணியில் அரசியல் தலைவர்கள் சிலர் இருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனவே அவர்களையும் கைது செய்ய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது சம்பந்தமாக இடைக்கால பிரதமர் கிளாட் ஜோசப் கூறும்போது, ஜனாதிபதி கொலை செய்யப்பட்டாலும் நாட்டின் பாதுகாப்பு நிலைமை கட்டுக்குள் இருக்கிறது. இதில் சம்பந்தப்பட்ட அனைவரும் கைது செய்யப்படுவார்கள். அவர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கூறினார். ஜனாதிபதி கொல்லப்பட்டதால் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்ற அச்சம் நிலவுகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியில் வராமல் வீட்டுக்குள்ளேயே முடங்கி கிடக்கிறார்கள்.
——————————
Reported by : Sisil.L