தமது தந்தையை விடுதலை செய்யுமாறு ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் அமைச்சர் நாமலிடம் கோரிக்கை

நாங்கள் அப்பாவுடன் சேர்ந்து வாழ ஆசைப்படுகின்றோம். சிறையில் வாடும் எங்கள் அப்பாவை உடனடியாக  பொது மன்னிப்பின் கீழ் விடுதலை  செய்யுங்கள்.” என தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷவிடம் கண்ணீர் மல்க நேரில் கோரினர். யாழ். வடமராட்சியின் முள்ளிப் பகுதியில் நேற்று நடைபெற்ற சேதனக் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றும் தொழிற்சாலை திறப்பு விழாவுக்கு அமைச்சர் நாமல் வந்தபோதே ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள் மேற்கண்டவாறு கூறினர். இந்தச் சந்திப்பின்போது, தமது தாய் உயிரிழந்து விட்டார் எனவும், தமது தந்தையை உடனடியாக விடுதலை செய்யுமாறும் ஆனந்தசுதாகரனின் பிள்ளைகள், அமைச்சர் நாமலிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பில் உரிய தரப்பினருடன் நான் பேசுவேன்” என்று இதன்போது அமைச்சர் நாமல் தெரிவித்தார். தமிழ் அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரன், 2008ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டு 13 வருடங்களாக மகஸின் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவருக்கு 9 வருடங்கள் கழித்து ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இந்நிலையில், இவரின் 36 வயதான மனைவி யோகராணி 2018 இல் உயிரிழந்திருந்தார்.ஆனந்தசுதாகரனை மனைவியின் மரணச் சடங்குக்கு அழைத்து வந்திருந்த போது, அவர் திரும்பிச் சென்ற வேளை அவரின் மகள் சிறைச்சாலை பஸ்ஸில் தாமும் தந்தையுடன் ஏறிச் செல்ல முயற்சி செய்திருந்தமை பார்த்தவர்களின் மனதை நெருட வைத்திருந்தது. அதேவேளை, ஏனைய தமிழ் அரசியல் கைதிகளின் உறவுகளும், அண்மையில் விடுதலையான தமிழ் அரசியல் கைதிகளும் அமைச்சர் நாமலை நேற்று சந்தித்தமை குறிப்பிடத்தக்கது.
—————–
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *