இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ அமெரிக்காவிலிருந்து இன்று(24) நாடு திரும்பியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் நிமல் லான்சா தெரிவித்தார்.
கடந்த மே 12ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்பட்ட பசில், டுபாய் வழியாக எமிரேட்ஸ் விமானத்தில் நாடு திரும்பியுள்ளார்.
“பி.சி.ஆர் சோதனைக்குட்படுத்தப்பட்ட பசில் தற்போது அமுலிலுள்ள சுகாதார விதிமுறைகளுக்கமைய தனிமைப்படுத்தலுக்காக அனுப்பப்பட்டுள்ளார் ” என நிமல் லான்சா செய்தியாளர்களிடம் கூறினார்.
நாடு திரும்பிய பசில் ராஜபக்ஷ நாட்டின் பொருளாதார நெருக்கடியை தனிப்பட்ட முறையில் கணக்கில் எடுத்துக்கொள்வார். மேலும் மக்களுக்கு நிவாரணம் வழங்க உறுதிபூண்டிருப்பார் என்றும் அவர் கூறினார்.
“மஹிந்த ராஜபக்ஷவின் ஜனாதிபதி பதவிக் காலத்தில் பசில் ராஜபக்ஷ பொருளாதாரத்துக்கு பொறுப்பாக இருந்தார். அப்போது நாட்டின் பொருளாதாரம் மிகச்சிறந்த இடத்தில் இருந்தது. தற்போது நாம் அதை அடைய முடியும் என நம்புகிறோம்” என லான்சா மேலும் தெரிவித்தார்.
—————-
Reported by : Sisil.L