தமிழ் மக்களின் வீடுகளையும் சொத்துக்களையும் எரித்து 30 வருட யுத்தத்திற்கு வழிவகுத்தவரும் 60 ஆயிரம் இளைஞர்களைக் கொன்று குவித்தவரும் தனது தந்தை பிரேமதாசா என்பதனை மறந்து அடக்குமுறைகளை பற்றி அவரது மகனான சஜித் பிரேமதாச அதிகமாகவே பேசுகிறார் என அரச தரப்பு பிரதம கொறடாவும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இடைக்கால வரவு செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
எதற்கெடுத்தாலும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது குற்றம் சாட்டும் எதிர்க்கட்சியினர் உக்ரைன் யுத்தத்தால் இதை விட மோசமான பொருளாதார நிலைமை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரும் போதும் ராஜபக்ச குடும்பத்தினர் மீது தான் பழி போடுவார்கள்.
நாட்டின் நிலைமை மிக மோசமாக காணப்படுகிறது. இத்தகைய நிலையில் ஆறு அடிப்படை விடயங்களை உள்ளடக்கி இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை அதிபர் ரணில் விக்ரமசிங்க சமர்ப்பித்துள்ளார். நாட்டின் இன்றைய நெருக்கடி நிலை நேற்று ஏற்பட்டதல்ல இது தொடர் பொருளாதார நெருக்கடி அந்த வகையில் எதிர்க் கட்சியில் சிலர் மொட்டு கட்சியை குறை கூறுவது எந்த விதத்திலும் ஏற்க முடியாது.
அரச செலவினங்கள் அதிகரித்தது அரசாங்க காலத்தில் ஏற்பட்ட ஒன்றல்ல முற்பட்ட அரசாங்க காலங்களிலும் அது தொடர்ந்தது. இதை கருத்தில் கொள்ளாது மொட்டு கட்சியை குற்றஞ்சாட்டுவது எதிர்க்கட்சியின் தொழிலாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
Reported by :Maria.S