யாழ்ப்பாணம் – வடமராட்சியில் கூரிய ஆயுதங்களால் ஒருவரைத் தாக்கி, அது தொடர்பான காணொளியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட 8 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 8 பேரும் இன்று பருத்தித்துறை பதில் நீதவான் ரஜீவன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
யாழ் – வடமராட்சி, நெல்லியடியை சேர்ந்த சந்தேகநபர்கள் 8 பேரும் கடந்த 10 நாட்களாக தலைமறைவாகியிருந்த நிலையில், நேற்றிரவு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பல நாட்களாக இருந்து வந்த முரண்பாட்டினால் 54 வயதானவர் மீது குறித்த நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆம் திகதி இந்த தாக்குதல் பதிவாகியுள்ளதுடன், அது தொடர்பான காணொளி Tiktok செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடமிருந்து தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள்கள், கூரிய ஆயுதங்கள் மற்றும் பொல்லுகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Reported by :Maria.S