கனடாவில் 1980 முதல் காணாமல் போனதாகக் கருதப்பட்டு தேடப்பட்டு வந்தார் பெண் ஒருவர் அண்மையில் வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கனடாவில் நீண்ட காலமாக காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த ஒரு பெண், வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வந்தது தெரியவந்துள்ளது.
ஒன்ராறியோவிலுள்ள Vanier என்ற இடத்தில் தனது குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்த நான்சி (Dale Nancy Wyman) என்ற இளம்பெண், 1980ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 16ஆம் திகதி திடீரென மாயமானார்.
பொலிஸ் விசாரணையில் நான்சி டாக்சி ஒன்றில் இறுதியாக பயணித்தது தெரியவந்தது. அந்த டாக்சி சாரதியை விசாரித்தபோது, தான் எங்கே போகிறேன் என தனக்கே தெரியவில்லை என்றும், ரொரன்டோ அல்லது மொன்றியலுக்குச் செல்லலாம் என்றும் நான்சி கூறியதாக அவர் தெரிவித்தார்.
அதன் பின் நான்சியை யாரும் பார்க்கவில்லை. குடும்பத்தார் நான்சியைக் காணாமல் கவலையுடன் வாழ்ந்துவந்த நிலையில், சுமார் 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களுக்கு ஒரு செய்தி கிடைத்துள்ளது.
ஆம், நான்சி இதுவரை வெளிநாடு ஒன்றில் வாழ்ந்து வந்துள்ளார். இந்தத் தகவலை மூன்றாவது தரப்பு நபர் ஒருவர் தெரிவித்துள்ள நிலையில், அவர் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கிறார் என்ற தகவல் குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அளித்தாலும்,அண்மையில் நான்சி உயிரிழந்து விட்டதாகவும் அதே நபர் தெரிவித்துள்ள செய்தி அவரது குடும்பத்தினருக்கு கவலையையும் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது.
நான்சி எந்த நாட்டில் வாழ்ந்து வந்தார் என்பதை பொலிஸார் தெரிவிக்கவில்லை.
Reported by :Maria.S