2.8 கிலோ கிராம் ஹெரோயினுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் கைது

2,832 கிராம் ஹெரோயினை நாட்டிற்குள் கடத்த முயன்ற இந்தியர் ஒருவரை இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
39 வயதான சந்தேக நபர் மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஶ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 315 ஊடாக நேற்று (26) மாலை 4:30 மணிக்கு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
 
சோதனையின் போது, ​​சந்தேக நபரின் பயணப் பொதியின் அடிப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த போதைப்பொருட்களை சுங்க அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
 
கைப்பற்றப்பட்ட ஹெராயினின் பெறுததி சுமார் ரூ. 84.96 மில்லியன் என்று சுங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஒரு கிலோகிராம் ஹெரோயினின் பெறுமதி சுமார் ரூ. 30 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
 
சந்தேக நபரும் பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படும், அதே நேரத்தில் இலங்கை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.