13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த வேண்டுமென்று இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றார். கடந்த 21ஆம் திகதி இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியை ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க சந்தித்து பேசியிருந்தார்.
இந்த சந்திப்பின்போது இனப்பிரச்சினைக்கான அரசியல்தீர்வு விடயத்திலும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தியிலும் அரசாங்கம் முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியப் பிரதமருக்கு விளக்கிக்கூறியிருந்தார்.
இந்த நிலையில்தான் 13ஆவது திருத்தச் சட்டத்தின் அமுலாக்கத்தின் அவசியம் குறித்தும் மாகாணசபை தேர்தல்களை நடத்த வேண்டியதன் அவசரம் தொடர்பிலும் இந்திய தரப்பில் வலியுறுத்தப்பட்டிருக்கின்றது. 1987ஆம் ஆண்டு இலங்கை– இந்திய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு 13ஆவது திருத்தச் சட்டம் இலங்கையின் அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டது. அதன் மூலமான மாகாணசபை முறைமை இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்தது.
தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வாக இந்தியாவால் முன்வைக்கப்பட்ட இந்த 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தும் விடயத்தில் இன்னமும் இழுபறி நிலைமை நீடித்திருக்கின்றது. மாறி மாறி ஆட்சிக்கு வருகின்ற அரசாங்கங்கள் 13ஆவது திருத்தம் தொடர்பில் இந்தியாவுக்கு தொடர்ச்சியான வாக்குறுதிகளை வழங்கி வந்திருந்தபோதிலும் நடைமுறையில் சாத்தியமான நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்பட்டிருக்கவில்லை.
இலங்கையில் யுத்தம் இடம்பெற்று வந்தபோது இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தன. பல்வேறு தீர்வுத் திட்டமுயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. சர்வகட்சிக்குழுக்கள் அமைக்கப்பட்டு தீர்வுத் திட்டம் தொடர்பில் ஆராயப்பட்டன. இந்தியா தனது பங்களிப்புக்கு 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தி தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வுகாணப்பட வேண்டுமென்று தொடர்ச்சியாக வலியுறுத்திவந்தது. தற்போதும் அவ்வாறே வலியுறுத்துகின்றது.
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து அரசியல் தீர்வின் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது. யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்தியாவுக்கு விஜயம் செய்திருந்த அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அன்றைய இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதன்போது 13ஆவது திருத்தத்துக்கு அப்பால் சென்று பிரச்சினைக்கு தீர்வுகாண தயார் என்று அவர் வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் அந்த வாக்குறுதி அவரது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்படவில்லை. 13க்கு அப்பால் சென்று தீர்வை காண்பதற்கு தயார் என வாக்குறுதி அளித்திருந்த மஹிந்த ராஜபக்ஷ வின் ஆட்சிகாலத்தில் மாகாணசபைகளுக்கான அதிகாரங்களை குறைப்பதற்கான முயற்சி முன்னெடுக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தியாவின் தலையீட்டை அடுத்தே அந்த முயற்சியை அன்றைய அரசாங்கம் கைவிட்டிருந்தது.
தற்போது 13ஆவது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் அறிவித்திருந்தார். அரசியலமைப்பிலுள்ள 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லையேல் அது குறித்து சர்வதேசம் தன்னிடம் கேள்வி எழுப்பும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
பாராளுமன்றத்தில் அரசியல் தீர்வுக்கான பேச்சுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகிரங்கமாக கட்சித் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த சந்தர்ப்பத்தில் சபையில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிடம் 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஆதரவு வழங்கத் தயாரா என்று ஜனாதிபதி கேள்வி எழுப்பியபோது அதற்கு அவரும் சம்மதம் வெளியிட்டிருந்தார்.
இதேபோன்றே பாராளுமன்றத்திலும் ஜனவரி மாதம் இடம்பெற்ற சர்வகட்சி குழுக்கூட்டத்திலும் ஐக்கிய மக்கள்சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன ஆகியோர் 13ஆவது திருத்தத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கடந்த புதன்கிழமை இடம்பெற்ற சர்வகட்சி குழுக்கூட்டத்தில் இதே நிலைப்பாட்டை இவர்கள் இருவரும் வெளிப்படுத்தியிருந்தனர்.
இவ்வாறு தெற்கின் பிரதான அரசியல் கட்சிகளின் தலைவர்கள் 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ள போதிலும் அதனை இன்னமும் நடைமுறைப்படுத்த முடியாமல் இருப்பது பெரும் கவலைக்குரிய விடயமாகவே அமைந்துள்ளது.
தற்போது 13ஆவது திருத்தத்தை அமுலாக்கும் விடயத்தில் அரசாங்கத் தரப்புக்குள் முரண்பட்ட நிலைமை நீடித்து வருகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க 13ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்த தயார் என்று அறிவித்திருந்தார். அவரும் தற்போது பொலிஸ் அதிகாரம் தவிர்ந்த ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கான யோசனையை முன்வைத்திருக்கின்றார்.
ஆனால் ஆளும் தரப்பின் பிரதான கட்சியான பொதுஜன பெரமுன 13ஆவது திருத்த அமுலாக்கல் தொடர்பில் முரண்பாடான கருத்துக்களை தெரிவித்து வருகின்றது. அதன் செயலாளர் சாகர காரியவசம் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு அதிகாரம் இல்லை என்றும் பொலிஸ் அதிகாரத்தை முன்னைய ஜனாதிபதிகளும் நடைமுறைப்படுத்தாத நிலையில்தற்போது அதனை நடைமுறைப்படுத்த முடியாது என்றும் கருத்து தெரிவித்திருக்கின்றார்.
சர்வகட்சிக்குழுக்கூட்டத்திலேயே இத்தகைய கருத்தை அவர் பகிரங்கமாக தெரிவித்துள்ளமையானது ஆளும் தரப்பில் பொதுஜன பெரமுன கூட 13 ஆவது திருத்தத்தின் அமுலாக்கலை விரும்பவில்லை என்ற தோற்றப்பாடு உருவாகியிருக்கின்றது. இந்த விடயம் தொடர்பில் தற்போது ஏனைய எதிர்க்கட்சிகளும் கேள்வி எழுப்பும் நிலை ஏற்பட்டிருக்கின்றது.
இதேபோன்றே ஏனைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் கருத்துக்களை கூறிவருகின்றனர். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி வருகின்றனர்.
13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த தயார் என்று அறிவித்திருந்த ஜனாதிபதி இன்று பொலிஸ் அதிகாரமற்ற ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்துவதற்கு தயார் என்று யோசனை முன்வைத்திருக்கின்றார்.
ஆனாலும் இந்த விடயத்தையும் தான் தனித்து செயற்படுத்த முடியாது என்றும் சகல தரப்பினருடனும் கலந்துரையாடியே முடிவினை எடுக்க முடியும் என்றும் அவர் தற்போது கூறுகின்றார்.
இதேபோன்றுதான் 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக அறிவித்திருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் தலைமையிலான கட்சியான பொதுஜன பெரமுன தற்போது தமதுநிலைப்பாட்டை மாற்றி கருத்துக்களை தெரிவித்து வருகின்றது.
இந்த விவகாரம் தொடர்பில் மூத்த தலைவரும் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தவருமான மஹிந்த ராஜபக் ஷ தீர்க்கமான முடிவொன்றினை எடுக்கவேண்டும்.
யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்த தலைவரான அவர் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான இந்த சந்தர்ப்பத்துக்கு உதவவேண்டும். வெறுமனே வாக்குறுதிகளை அளித்துவிட்டு அதனை நடைமுறைப்படுத்தாது ஏமாற்றும் செயற்பாடுகளில் இத்தகையவர்கள் ஈடுபடுவது ஏற்றுக்கொள்ளத்தக்க நடவடிக்கையல்ல.
தற்போதைய நிலையில் 13ஆவது திருத்தச் சட்டத்தை வைத்து அரசியல் தலைமைகள் விளையாடுகின்ற நிலைமை நீடிக்கக்கூடாது. தமது அரசியல் சுயநலன்களை அடைந்து கொள்வதற்காக ஆளும் , எதிர்க்கட்சிகள் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விவகாரத்தை பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்வது அவசியமாகவுள்ளது.
தமிழ் மக்களின் அரசில்தீர்வுக்கான ஆரம்பப்புள்ளியான 13ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் வழங்கிய வாக்குறுதிகளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உட்பட்டோர் நிறைவேற்றவேண்டும். அதேபோன்றே எதிரணியினர் அதற்கான ஆதரவை வழங்கவேண்டும்.
இந்த விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளிடையேயும் குழப்பமான நிலைமை காணப்பட்டு வருகின்றது. 13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தும் விவகாரத்தில் தமிழ் தேசியக்கட்சிகளின் தலைமைகளும் பொறுப்புணர்வுடன் ஒற்றுமையாக செயற்படுவதற்கு முன்வரவேண்டும். ஒவ்வொருவரும் வெவ்வேறு நிலைப்பாடுகளில் செயற்படுவதை தவிர்க்கவேண்டும். இந்த விவகாரத்தில் சகல தரப்பும் இதயசுத்தியுடன் செயற்பட்டு 13ஆவது திருத்தத்தையாவது முதலில் நடைமுறைப்படுத்த முன்வரவேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம்.
Reported by :S.Kumara