பன்னிரண்டு வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக கோவிட் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று தெரிவித்தார். சிறுவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் போது பல்வேறு பிரச்சினைகள் காணப்படும் சிறுவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண கோவிட்-19 சிறுவர் சிகிச்சைப் பிரிவைத் திறந்து வைக்கும் நிகழ்வில் தங்காலை கால்ட்ன் இல்லத்திலிருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்துகொண்ட போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
பிரதமரின் பாரியார் திருமதி ஷிராந்தி ராஜபக்ஷ சம்பிரதாய முறைப்படி விளக்கேற்றி அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள தென் மாகாண கோவிட்-19 சிறுவர் சிகிச்சைப் பிரிவை திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவர்கள் உள்ளிட்ட தாதியர்களுடன் கண்காணிப்பிலும் ஈடுபட்டார்.அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் கொவிட் சிகிச்சை நடவடிக்கைகள் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஆரம்பிக்கப்பட்டன. அன்று முதல் இதுவரை சுமார் 6000 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. கோவிட் தொற்றுக்கு உள்
ளாகும் சிறுவர்களுக்கு இதுவரை மகளிர் வார்ட் வளாகத்திலேயே சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.புதிய பிரிவு நிறுவப்பட்டதன் ஊடாக சிறுவர்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்த முடியும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கோவிட்-19 சிறுவர் சிகிச்சைப் பிரிவுகளை அனைத்து மாகாணங்களிலும் நிறுவுவதே சிறுவர் வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் எண்ணக்கருவாகவுள்ளது.குறித்த நிகழ்வில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக இணைந்து கொண்டு பிரதமர் ஆற்றிய உரை வருமாறு,
“இந்தத் தொற்று ஏற்பட்ட போது பிள்ளைகளின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு முதலில் பாடசாலைகளை மூடினோம். அவ்வப்போது ஆபத்து குறைந்த போதிலும் நாம் பாடசாலைகளைத் திறக்கவில்லை என்பது உங்களுக்கு நினைவிருக்கும்.எனினும், இவ்வாறு பாடசாலைகளை மூடி வைத்திருக்க எமக்கு விருப்பம் இல்லை.
ஏனெனில் கல்வி மாத்திரமன்றி கல்விக்கு அப்பாற்பட்ட அறிவும் பாடசாலைகளில் புகட்டப்படுகின்றது. பாடசாலைகளில் ஆசிரியர்கள் எமக்கு வாழ்க்கையையும் கற்பிக்கின்றனர். அது இன்றைய நாளை விட எதிர்காலத்திற்கே உதவும். அதனால் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்வி சாரா ஊழியர்கள் ஆகியோருக்கு தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னர் 12 வயதுக்கு
மேற்பட்ட சிறுவர்களுக்கு கட்டம் கட்டமாக தடுப்பூசி வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. அதன்போது பல்வேறு பிரச்சினைகள் உள்ள பிள்ளைகளுக்கு முன்னுரிமை வழங்கவும் எதிர்பார்க்கப்படுகிறது.
எமக்கு மட்டுமின்றி உலகின் பல அபிவிருத்தி அடைந்த நாடுகளுக்கும் இந்தத் தொற்றைக் கட்டுப்படுத்துவது ஒரு சவாலாகக் காணப்படுகிறது. தடுப்பூசி வழங்கலின் மூலம் உயிர் ஆபத்துகளை தடுத்து நோய் பரவலை கட்டுப்படுத்துவதே தற்போதுள்ள ஒரே தீர்வாகும்.
நாம் ஒரு நாடு என்ற ரீதியில் தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டில் மிகவும் முன்னணியில் காணப்படுகின்றோம். எனினும், இதனை மேலும் துரிதப்படுத்தி மக்களின் உயிரைக் காக்க வேண்டும். அதற்காகவே நாம் முன்னுரிமை வழங்குகின்றோம்.” எனவும் பிரதமர் தெரிவித்தார்.
Reported by : Sisil.L