வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி இடமாற்றம்

 வெலிக்கடை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உடன் அமுலாகும் வகையில் பொலிஸ் மேலதிகப் படை தலைமையகத்திற்கு இடமாற்றப்பட்டுள்ளார்.

தற்காலிகமாக இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில், பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

குறித்த சம்பவம் தொடர்பில் வெலிக்கடை பொலிஸ் அதிகாரிகள் சிலர் ஏற்கனவே பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 

ஒழுக்காற்று நடவடிக்கைகளின் கீழ் குறித்த பொலிஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இதற்கமைய, உப பொலிஸ் பரிசோதகர், இரண்டு சார்ஜண்ட்கள் மற்றும் கான்ஸ்டபிள் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் ஒரு கான்ஸ்டபிளும் இரண்டு பெண் கான்ஸ்டபிள்களும் வெலிக்கடை பொலிஸ் நிலையத்திலிருந்து கொழும்பு வடக்கு, கொழும்பு தெற்கு மற்றும் கொழும்பு மத்தி பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

வீடு ஒன்றில் இடம்பெற்ற திருட்டுச் சம்பவம் தொடர்பில், குறித்த வீட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்த R.ராஜகுமாரி என்ற பெண் கடந்த 11 ஆம் திகதி கைது செய்யப்பட்டதுடன், திடீரென நோய்வாய்ப்பட்டதால் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.

பதுளை தெமோதர பகுதியை சேர்ந்த 42 வயதான பெண் ஒருவரே உயிரிழந்தார்.

அவரது மரணத்தில் சந்தேகம் நிலவுவதாக உறவினர்களும் ஏனைய தரப்பினரும் தெரிவித்ததால், சம்பவம் தொடர்பான விசாரணைகள் பொலிஸ் விசேட விசாரணைப் பிரிவிற்கு மாற்றப்பட்டன.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *