வயது குறைந்த சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவது தொடர்பில் அறிவிக்கும் வகையில் கொழும்பு அவசர மைத்துக்கு பொலிஸாரினால் புதிய ஹொட்லைன் இலக்கமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மேல் மாகாணத்தில் வீட்டு உதவியாளர்களாக பணியாற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தொடர்பில் ஆராய்வதற்காக நேற்று பொலிஸார் கொழும்பு நகரம் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் சிறப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளனர்.
குறிப்பிட்ட வயது எல்லைக்கு குறைந்த சிறுவர்களை பணிக்கு அமர்த்துவது தொடர்பில் தகவல் கிடைத்துள்ளது. ஆகையால் இது தொடர்பில் பொலிஸாரால் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் தகவல்களை வழங்கும் வகையில் கொழும்பு அவசர மையத்தினால் 011 2 433 333 எனும் தொலைபேசி இலக்கமானது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோகண தெரிவித்தார். மோதர மற்றும் கொள்ளுப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் பொலிஸாரினால் சிறப்பு நடவடிக்கையானது முன்னெடுக்கப்பட்டதுடன், 30 வீடுகள் மற்றும் குடியிருப்புகளில் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸ் உளவுத் துறையினருக்கு சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது தொடர்பில் கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கு அமைய இன்றும் பொலிஸாரினால் சிறப்பு நடவடிக்கையானது முன்னெடுக்கப்படுவதாக அஜித் ரோகண மேலும் தெரிவித்தார்.
——————–
Reported by : Sisil.L