கனடாவில் கொட்டிய பலத்த மழையால் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வன்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை சக்தி வாய்ந்த புயல் தாக்கியது.
இந்தப் புயலைத் தொடர்ந்து அங்கு கன மழை கொட்டத் தொடங்கியதாகவும், ஒரு மாதத்தில் பெய்ய வேண்டிய மழை ஒரே நாளில் கொட்டித் தீர்த்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஒட்டுமொத்த பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணமும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன், கன மழையால் வன்கூவர் நகரிலுள்ள அனைத்து நீர்நிலைகளிலும் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
வெள்ள நீர் பெருக்கெடுத்ததால் கனடாவின் மற்றைய பகுதிகளுடன் வன்கூவரை இணைக்கும் வீதிகள் துண்டிக்கப்பட்டதுடன், பல இடங்களில் பயங்கர மண் சரிவும் ஏற்பட்டது.
இந்த அனர்த்தத்தினுள் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 2 பேர் மாயமாகி உள்ளனர். புயல், மழை, வெள்ளப் பாதிப்புக் காரணமாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ள அதேவேளை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
———–
Reported by : Sisil.L