தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் பலத்த மழை பெய்து வருகிறது.
டெல்லி, ஹரியானா, உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்கள் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹத்தினிகுண்ட் தடுப்பணையிலிருந்து அதிக அளவில் தண்ணீர் திறந்து விடப்படுவதால், யமுனை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.
இதன் காரணமாக டெல்லி யமுனை ஆற்றில் நீர்மட்டம் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக 205 மீட்டரை தாண்டிய வண்ணம் உள்ளது. 206 மீட்டரை தொட்டாலே அபாயக் கட்டத்தை தாண்டியதாகும். ஆனால் நேற்றிரவு 208.08 மீட்டரை எட்டியது. இதனால் கரையோரப் பகுதிகளில் வெள்ளம் ஆக்கிரிமிக்க தொடங்கியுள்ளது.
யமுனையின் வெள்ள நீர் நகருக்குள் புகுந்துள்ள நிலையில், அத்தியாவசிய பொருட்களை ஏற்றிவரும் வாகனங்கள் தவிர, டெல்லிக்குள் இதர கனரக வாகனங்கள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டெல்லி போக்குவரத்துத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு நேற்று (12) யமுனை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, இயற்கை சீற்றத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள இமாச்சலப் பிரதேசத்தில் இருந்து 50,000-க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
கடந்த 3 நாட்களில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவு என இமாச்சலப் பிரதேசம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
அங்கு சுமார் 1,300 வீதிகள் சேதமடைந்துள்ளன. 40 பாலங்கள் சிதைந்துள்ளன.
79 வீடுகள் முற்றிலுமாக தரைமட்டமாகியுள்ளதுடன், 333 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
தேசிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டதால் மக்கள் அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இமாச்சலப் பிரதேசத்தில் பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவு காரணமாக இதுவரை 88 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. 16 பேரை காணவில்லை என்றும், 100 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.