வங்காள விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழையுடன் கூடிய வானிலை நிலவும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வட மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அத்துடன், குறித்த பகுதிகளின் சில இடங்களில் 75 மில்லிமீட்டர் வரை மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
நாட்டின் ஏனைய சில பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படும் என்பதுடன், மின்னல் தாக்கங்கள் குறித்து அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மழையுடன் கூடிய வானிலை காரணமாக 3,018 குடும்பங்களை சேர்ந்த 12,124 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இன்று காலை 8.30 உடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் குருநாகல் பகுதியிலேயே அதிக மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.
குருநாகலில் 138.5 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் கென்யன் பகுதியில் 105.3 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் நோர்ட்டனில் 103.6 மில்லிமீட்டர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளது.
நேற்று மாலை முதல் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழை காரணமாக மலையகத்தின் பல பகுதிகளிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
Reported by :Maria.S