இலங்கை ஜனநாயக சோஷலிச குடியரசின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க ,பிரதம நீதியரசர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
பதவியேற்க நாடாளுமன்றத்துக்கு இன்று காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன வரவேற்றார்.
இதனையடுத்து, காலை 10.10 மணியளவில் பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில், இலங்கையின் 8ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
கடந்த மே மாதம் 9ஆம் திகதி முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியதைத் தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டார்.
இந்தப் பதவியை வகித்து வரும் போதே மக்களின் எதிர்ப்பை அடுத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதிப் பதவியிலிருந்து விலகினார்.
இதனைத் தொடர்ந்து அரசியலமைப்புக்கு அமைய பிரதமராக பதவி வகித்துவந்த ரணில் விக்கிரமசிங்க கடந்த 14ஆம் திகதி பதில் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்.
பதில் ஜனாதிபதியாக செயற்பட்ட ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற இரகசிய வாக்கெடுப்பின்போது, 134 வாக்குகளை பெற்று புதிய ஜனாதிபதியாக தெரிவானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அலகப்பெரும 82 வாக்குகளையும், அநுர குமார திஸாநாயக்க 3 வாக்குகளையும் பெற்றுக்கொண்டனர்.
இதேவேளை, நாட்டின் எட்டாவது ஜனாதிபதியாக ரணில் விக்கிரமசிங்க தெரிவு செய்யப்பட்டுள்ளமைக்கான விசேட வர்த்தமானி அறிவித்தல் நேற்று பிற்பகல் வெளியிடப்பட்டது.
—————-
Reported by :Maria.S