அடக்குமுறையை நிறுத்து, கைது செய்யப்பட்ட அனைத்து போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய் என அனைத்து பல்கலைக்கழக மாணவ ஒன்றிய மாணவர்கள் இன்று ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்துக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தினர்.
இதில் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை உடனடியாக இரத்து செய், மக்கள் சக்தியை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்புக்காகப் போராடுவோம், இனி கடன் இல்லை, திருடப்பட்ட பணத்தைக் கொடு, பொருட்களின் விலை-வரிச் சுமையைத் தாங்க முடியாது, 3 வருடங்களாக முடங்கிக் கிடக்கும் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் உடனடியாகத் திற, என கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
குறித்த ஊர்வலம் ஜனாதிபதி செயலகத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த போதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தப் பேரணி காரணமாக கொழும்பு நகர மண்டபம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது.
ஆர்ப்பாட்டப் பேரணியின் போது மாணவர் சம்மேளனத்தின் அழைப்பாளர் வசந்த முதலிகே மற்றும் ஜெஹான் அப்புஹாமி உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
———–
Reported by :Maria.S