யாழில் கர்ப்பப்பை அகற்றும் சத்திரசிகிச்சையின் போது துணியை வைத்து தைத்ததால் பெண் மரணம்

யாழ்ப்பாணம் நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவ மனையில் சத்திர சிகிச்சை செய்து கொண்ட பெண் கிருமித் தொற்றுக் காரணமாக உயிரிழந்துள்ளார்.

 புற்றுநோய் காரணமாக கர்ப்பப்பையை அகற்றும் சத்திர சிகிச்சை முன்னெடுக்கப்பட்ட நிலையில் அவரது வயிற்றுக்குள் துணி ஒன்று வைத்துத் தைக்கப்பட்டதால் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. அதுவே உயிரிழப்புக் காரணம் என சட்ட மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 பருத்தித்துறை யாக்கருவைச் சேர்ந்த மனோன்மணி குலவீரசிங்கம் (வயது-60) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

 
பெண்ணுக்கு கர்ப்பப்பையில் ஏற்பட்ட புற்றுநோய் காரணமாக அதனை அகற்றுவதற்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. அதனால் நெல்லியடியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி பெண் நோயியல் சத்திரசிகிச்சை நிபுணர் ஒருவரினால் பெண்ணின் கர்ப்பப்பை அகற்றும் சத்திர சிகிச்சை இடம்பெற்றது. இந்த நிலையில் அந்தப் பெண்ணுக்கு திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக பருத்தித்துறை ஆதார மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் அவர் உயிரிழந்தார். மந்திகை ஆதார மருத்துவமனை சட்ட மருத்துவ வல்லு நர் கனகசபாபதி வாசுதேவா முன்னிலையில் பெண்ணின் சடலம் நேற்று உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

 
சத்திர சிகிச்சையின் போது பெண்ணின் வயிற்றுக்குள் 50 சென்ரி மீற்றர் நீளம் 10 சென்ரி மீற்றர் அகலமுள்ள துணி ஒன்று வைத்து தையலிடப்பட்டமை கண்டறியப்பட்டது. அவரது உயிரிழப்புக்கு அந்தத் துணியால் ஏற்பட்ட கிருமித்தொற்றே காரணம் என்று சட்ட மருத்துவ அறிக் கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
————————
Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *