முன்னாள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மற்றும் அரச அச்சக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஜயம்பதி ஹீன்கெந்த ஆகியோருக்கு எதிராக கொழும்பு பிரதம மேல் நீதிமன்றத்தில் இன்று குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பிரதம நீதிபதி தமித் தொடவத்த முன்னிலையில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் பிரதிவாதிகள் இருவரும் 30,000 ரூபா பெறுமதியான ரொக்கப் பிணையிலும் 3,50,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளிலும் செல்ல பிரதம நீதிபதி உத்தரவிட்டார்.
2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் 13 ஆம் திகதி அல்லது அதனை அண்மித்த காலப்பகுதியில் அரச அச்சக கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 2,30,984 ரூபா 45 சதம் பணத்தை பயன்படுத்தி, தங்களின் தனிப்பட்ட தொலைபேசி கட்டணத்தை செலுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் பிரதிவாதிகளுக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நவம்பர் மாதம் 03 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Reported by :Maria.S