மாதகலில் நில அளவைத் திணைக்களத்தினரை விரட்டியடித்த மக்கள்

கடற்படை புலனாய்வாளர்கள், இராணுவ புலனாய்வாளர்களின் அச்சுறுத்தல்களையும் தாண்டி நேற்று(30) மாதகல் கிழக்கு ஜே/150 கிராம சேவையாளர் பிரிவில் குசுமான்துறை பிரதேசத்திலுள்ள அக்போ இரண்டு கடற்படை தளத்திற்கான காணி சுவீகரிப்பு முயற்சி மக்களின் கூட்டு முயற்சியால் முறியடிக்கப்பட்டது.


குறித்த பிரதேசத்தில் காணி அளவீடு செய்ய வந்த நில அளவைத் திணைக்களத்தையும் குறித்த காணிக்குள் இறங்க விடாமல் குறித்த காணி உரிமையாளர்கள், பொதுமக்கள் அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்டோர் எதிர்ப்பை  வெளிப்படுத்தினர்.


குறித்த பிரதேசத்தில் இருந்து நில அளவை திணைக்களத்தினர் விலகி இருந்தாலும் சற்று தூரத்தில் அவர்கள் தமது வாகனத்தை நிறுத்தி இருந்தமையைக் காணமுடிந்தது. இதனையடுத்து குறித்த இடத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் இன்று காணி அளவிடமுடியாது, நாங்கள் அதை செய்ய விடமாட்டோம் என்று தெரிவித்ததை அடுத்து அவர்கள் குறித்த பகுதியில் இருந்து விலகினர்.


இதனைத் தொடர்ந்து குறித்த காணி பிரதேசத்திற்குச் சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அரை மணி நேரத்தின் பின் குறித்த காணி அளவீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்ற செய்தியை அறிந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் குறித்த இடத்தில் அமர்ந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர் .
குறித்த எதிர்ப்பு நடவடிக்கையின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஈஸ்வரபாதம் சரவணபவன், வலி தென்மேற்கு பிரதேச சபை தவிசாளர் ஜெபனேசன், வலி தென்மேற்கு பிரதேச சபை உறுப்பினர்களான ஜிப்ரிக்கோ, அனுஷன்,ரமணன், சிவனேஸ்வரி, அச்சுதபாயன் ராஜினி உள்ளிட்டோரும் வலிவடக்கு பிரதேச சபை உறுப்பினர்களான சஜீவன், கலையமுதன், வேலணை பிரதேச சபை உறுப்பினரான நாவலன், வலிமேற்கு பிரதேச சபை உறுப்பினரான ஜெயந்தன் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த பிரமுகர்களும் பொதுமக்கள், காணி உரிமையாளர்கள் என பலரும் கலந்து கொண்டு தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.


Reported by : Sisil.L

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *