மழையுடனான வானிலை காரணமாக வட மாகாணத்திலுள்ள 16 பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.
கிளிநொச்சியில் 8 பாடசாலைகளும் வவுனியாவில் ஒரு பாடசாலையும் முல்லைத்தீவில் 7 பாடசாலைகளும் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக வட மாகாண ஆளுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
வானிலை சீரடைந்ததன் பின்னர் பாடசாலைகள் மீள திறக்கப்படும் என வட மாகாண ஆளுநர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, நிலவும் மழையுடனான வானிலை இன்று(20) முதல் தற்காலிகமாக குறைவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
எனினும் வடக்கு, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை, மாத்தளை மாவட்டங்களிலும் இன்றும் மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பிற்பகல் 02 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பதுளை, ஹம்பாந்தோட்டை, களுத்துறை, கண்டி, கேகாலை, குருணாகல், மாத்தளை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
Reported by :S.Kumara