மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடை

 மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டுள்ள வௌிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை நீடித்து, கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெக்குனவெல இன்று(26) உத்தரவு பிறப்பித்துள்ளார். 

கீர்த்தி தென்னகோன் தாக்கல் செய்துள்ள தனிப்பட்ட மனுவை இன்று(26) பரீசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

2022ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் 550 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான முறிக்கான கட்டணத்தை செலுத்தியமையினூடாக, நாட்டை வங்குரோத்து நிலைக்கு இட்டுச் சென்றுள்ளதாக தெரிவித்து கீர்த்தி தென்னகோன் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார்.

மனுவின் பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள அஜித் நிவாட் கப்ராலை தலா 10 இலட்சம் ரூபா பெறுமதியான  இரு சரீர பிணைகளில் செல்ல மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது, அஜித் நிவாட் கப்ரால் சார்பில் மன்றில் ஆஜராகிய சட்டத்தரணிகள், நியாயமான காரணங்கள் இன்றி முறைப்பாட்டாளரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்ததுடன், வழக்கை நிராகரிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கை தொடர்பில் இருதரப்பு ஆட்சேபனைகளையும் எதிர்வரும் 24ஆம் திகதி மன்றில் சமர்ப்பிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *