மண்ணெண்ணெய் விலை உயர்வை ஈடு செய்ய குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கும், மீன்பிடி மற்றும் பெருந்தோட்டத் துறைகளைச் சேர்ந்தவர்களுக்கும் மானியம் வழங்கப்படும் என அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு பண மானியம் வழங்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று அமைச்சரவைக்கு அறிவித்ததாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்தப் பிரேரணை எதிர்வரும் சில வாரங்களில் நடைமுறைப்படுத்தப்படும்.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 253 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, தற்போது அறுவடையில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு மேலதிக எரிபொருள் இருப்புகளை வழங்குவது தொடர்பில் எரிசக்தி அமைச்சரும் விவசாய அமைச்சரும் இன்று கலந்துரையாடவுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதிகளுக்கு ஏற்கனவே எரிபொருள் இருப்புகள் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலதிக தேவையின் அடிப்படையில் எதிர்வரும் நாட்களில் மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்கள் ஊடாக எரிபொருள் இருப்புகள் அனுப்பி வைக்கப்படும் என பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
—-
Reported by :Maria.S