வட மாகாணத்தில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அதிலிருந்து மீட்கும் நடவடிக்கைக்கு வட மாகாண ஆளுநர் அலுவலகத்தை அணுக முடியும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை மீட்டெடுப்பதற்காக பல்வேறு செயற்திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் வட மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.
யாழ். சிறைச்சாலையில் போதைப்பொருள் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களுடன் நேரடியாக சென்று கலந்துரையாடியதாகவும் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கூறியுள்ளார்.
போதைப்பொருளுக்கு அடிமையாகி அண்மையில் 15 வயது சிறுவன் உயிரிழந்தமையையும் தற்போது போதைப்பொருள் பாவனையால் சுகவீனமுற்று 17 வயது சிறுவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ள ஆளுநர், போதைக்கு அடிமையான எவரும் அதிலிருந்து விடுபடுவதற்கு ஆளுநர் அலுவலகத்தை அணுக முடியும் என கூறியுள்ளார்
போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் கண்டு மறுவாழ்வு அளிப்பதற்கு பெற்றோர்கள் அல்லது குடும்பத்தவர்களின் உதவி தேவைப்படுவதாகவும் வட மாகாண ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், வட மாகாணத்தில் போதைப்பொருள் விற்பனையாளர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் தொடர்பில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
Reported by :Maria.S