போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த அக்மீமன பொலிஸ் உத்தியோகத்தர்களின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
வலஹந்துவவிலிருந்து நுகதுவ நோக்கிச் செல்லும் வீதியின் குறுக்கு வீதியொன்றில் நேற்றிரவு(10) மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருவர் சந்தேகத்திற்கிடமாக செயற்பட்டதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது குறித்த இருவரையும் பொலிஸார் சோதனையிட முற்பட்ட போது, அவர்களில் ஒருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் மற்றைய நபர், பொலிஸாரை நோக்கி கைக்குண்டொன்றை வீச முற்பட்ட போது, பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 21 வயதான சந்தேகநபர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்ற 18 வயதான மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் பொலிஸ் உத்தியோகத்தர்களால் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்து T56 ரக 105 ரவைகள் அடங்கிய பொதி மற்றும் வௌிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டொன்று என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
Reported by :S.Kumara