பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட்ட பெண் ஒருவர் நோய்வாய்ப்பட்ட நிலையில், உறவினர்களால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் பாணந்துறை – திக்கல பகுதியில் நேற்றிரவு பதிவானது.
51 வயதான குறித்த பெண் சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த குற்றச்சாட்டில் பாணந்துறை வடக்கு பொலிஸாரால் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டிருந்தார்.
தனது தாய் சுகவீனமுற்றவர் என்பதால், தந்தையை அல்லது தனது கணவரை அழைத்துச் செல்லுமாறு பொலிஸாரிடம் கேட்டுக்கொண்ட போதும் தனது தாயை அவர்கள் அழைத்துச் சென்றதாக உயிரிழந்த பெண்ணின் மகள் குறிப்பிட்டார்.
தனக்கு உடல் நலமில்லை என அப்பெண் கூறிய பின்னர் அவரை அழைத்து வந்த முச்சக்கரவண்டியிலேயே வைத்தியசாலைக்கு பொலிஸார் அனுப்பி வைத்ததாகவும் இடையில் அப்பெண்ணின் உறவினர்கள் தமது வாகனத்தில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.
எனினும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது அவர் உயிரிழந்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கூறினார்.
உயிரிழந்தவரின் சடலம் தற்போது பாணந்துறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சடலம் மீதான பிரேத பரிசோதனை நாளை (26) இடம்பெறவுள்ளது.
Reported by :Maria.S