பொதுமக்களால் அரச நிறுவனங்களிடம் கையளிக்கப்படும் கடிதங்கள், மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் செயற்பாட்டை நெறிப்படுத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
கடிதங்கள், மின்னஞ்சல்கள் மற்றும் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்கும் விடயதானங்களை உள்ளடக்கிய விசேட கடிதம் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கடிதங்களுக்கு இறுதி பதில் அனுப்ப முடியாத பட்சத்தில், ஒரு வாரத்திற்குள் கடிதம் கிடைத்துள்ளதாக இடைக்கால பதிலையும் நான்கு வாரங்களுக்குள் இறுதி பதிலையும் அனுப்ப வேண்டியதன் அவசியம் தொடர்பில் அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
- அனைத்து உத்தியோகபூர்வ கடிதங்களுக்கும் பதில்களை அனுப்பும் போது, கடிதத்தின் கையொப்பத்திற்கு கீழே, விடயத்திற்கு பொறுப்பான நிறுவன அதிகாரியின் நேரடி தொலைபேசி இலக்கம், தொலைநகல் இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி என்பன குறிப்பிடப்பட வேண்டும்.
- அலுவலகங்களின் பொது மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்களை தினமும் பார்வையிட வேண்டுமென்பதுடன், அதற்கென அதிகாரியொருவர் நியமிக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
- நிறுவன அதிகாரியின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள் தினமும் பார்க்கப்பட வேண்டுமென்பதுடன், அவற்றுக்கு அன்றைய தினமே பதில் அனுப்ப வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அன்றைய தினம் பதில் அளிக்க முடியாத பட்சத்தில், கடிதம் கிடைத்துள்ளதாகவும், பதில் அளிப்பதற்காக தேவைப்படும் கால அவகாசம் குறித்தும் இடைக்கால பதில் அனுப்பப்படல் வேண்டும்.
- அலுவலகத்திற்கான அனைத்து தொலைபேசி அழைப்புகளுக்கும் பதிலளிக்க வேண்டும் என்பதுடன், அதிக தொலைபேசி அழைப்புகளைப் பெறும் நிறுவனங்கள் / துறைகள் இருப்பின், அந்த அழைப்புகளுக்கு பதிலளிக்க ஒரு குறிப்பிட்ட அதிகாரியை நியமிக்க வேண்டும்.
- மேலும், குறித்த அதிகாரி தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட நபரின் பெயர், விபரம் மற்றும் பதில் அனுப்ப வேண்டிய தொலைபேசி இலக்கம் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும்.
- அதே சந்தர்ப்பத்தில், பதிலளிக்க கடினமாக உள்ள விடயங்கள் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரி, விடயத்திற்கு பொறுப்பான அதிகாரிகள் ஊடாக நியாயமான நேரத்திற்குள் பதில்களை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
என ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Reported BY:Maria.S