சித்திரை புதுவருடத்திற்காக கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக விசேட ரயில் சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதத்தில் இரவு 7.30 க்கு கொழும்பிலிருந்து பதுளை வரை ரயிலொன்றும் மாலை 5.20 க்கு பதுளையிலிருந்து கொழும்பு வரை ரயிலொன்றும் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஏப்ரல் 5ஆம் திகதி தொடக்கம் நாளாந்தம் காலை 6.30 க்கு கொழும்பிலிருந்து பதுளை வரை பயணிக்கும் ரயில் மற்றும் காலை 7 மணிக்கு பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி பயணிக்கும் ரயிலும் ஏப்ரல் மாதம் 17ஆம் திகதி வரை சேவையில் ஈடுபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவைதவிர ஏப்ரல் 15 மற்றும் 16ஆம் திகதிகளில் கோட்டை முதல் காலி வரை விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.
16 மற்றும் 17ஆம் திகதிகளில் காலியிலிருந்து கோட்டை வரையில் விசேட ரயில் சேவையொன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே பிரதி போக்குவரத்து அத்தியட்சகர் M.J.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
இதனிடையே, புத்தாண்டு தினத்தை முன்னிட்டு விசேட பஸ் சேவையொன்றும் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.
கொழும்பு மத்திய பஸ் தரிப்பிடத்திலிருந்து தெரிவு செய்யப்பட்ட பிரதான நகரங்களுக்கு இந்த பஸ் சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் A.H.பண்டுக ஸ்வரணஹம்ச தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 18ஆம் திகதி வரை இந்த விசேட பஸ் போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேவைக்கேற்ப தனியார் பஸ் சேவைகளும் முன்னெடுக்கப்படும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
Reported by :Maria.S