பாசையூர் பகுதியில் வீடொன்றுக்குள் புகுந்து அடாவடியில் ஈடுபட்டுத் தப்பித்த கும்பலை சேர்ந்த 7 பேர் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.சம்பவம் இடம்பெற்று அரை மணி நேரத்தில் இந்தக் கைது நடவடிக்கை இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது;
பாசையூர் புனித அந்தோனியார் கோயிலுக்கு அண்மையாக உள்ள வீடொன்றுக்குள் புகுந்த 7 பேர் கொண்ட கும்பல் ஒன்று பெறுமதியான பொருட்களை உடைத்து அடாவடியில் ஈடுபட்டதுடன் வீட்டிலிருந்தவர்களையும் அச்சுறுத்தி விட்டுத் தப்பித்தது. சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினர் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தனர். இதனடிப்படையில் நடத்தப்பட்ட தேடுதலில் 3 மோட்டார் சைக்கிள்களில் பயணித்த 7 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து வாள் ஒன்றும் இரண்டு மரக்கட்டைகளும் கைப்பற்றப்பட்டன.
பாசையூர், மணியந்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த 22 முதல் 27 வயதுக்கு உட்பட்ட 7 பேரே கைது செய்யப்பட்டனர்.
சந்தேக நபர்கள் 7 பேரும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் கையளிக்கப்பட்டனர்.
————–
Reported by : Sisil.L