பாகிஸ்தானின் ஹர்னாய் நகரில் இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 20 பேர் பலியாகியுள்ளனர்.
பாகிஸ்தான் நாட்டின் தெற்குப் பகுதியில் பலுசிஸ்தான் மாகாணம் உள்ளது. இதன் தலைநகரம் குயட்டாவில் இருந்து 100 கி.மீ. தூரத்தில் ஹர்னாய் என்ற நகரம் உள்ளது. இங்கு இன்று அதிகாலை 3.20 மணிக்கு திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹர்னாயில் இருந்து 15 கி.மீ. தூரத்தில் இதன் மையப்புள்ளி இருந்தது. ரிக்டர் அளவில் 5.9 ஆக நிலநடுக்கம் பதிவானது.
இதனால் ஹர்னாய், தலைநகரம் குயட்டா, சிபி, பிசைன், குய்லா சாய்புல்லா, ஜமான், ஷியார், ஷாப் உள்ளிட்ட பகுதிகள் பயங்கரமாக குலுங்கின. இதில் வீடுகளும், கட்டிடங்களும் இடிந்து விழுந்தன. இந்தப் பகுதியில் பெரும்பாலும் மண்ணால் வீடுகள் கட்டப்பட்டிருந்தன. நிலநடுக்கத்தின் அதிர்வுகளைத் தாங்க முடியாமல் அவை இடிந்து விழுந்தன.
அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான மக்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்தார்கள். அவர்கள் மீது இடிபாடுகள் விழுந்தன. அவற்றில் சிக்கி பலரும் உயிரிழந்தார்கள். ஏராளமானோர் காயமடைந்தனர்.
இதுவரையான தகவல்களின்படி 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 300 பேர் காயமடைந்திருப்பதாகவும் பாகிஸ்தான் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
————-
Reported by : Sisil.L