பருத்தித்துறை நகரத்தின் இதயப் பகுதி என அழைக்கப்படும் – ஜே 401 கிராமசேவகர் பகுதி நேற்று மாலை முதல் முடக்கப்பட்டது. இந்தப் பகுதியில் நேற்றும் – நேற்று முன்தினமும் மட்டும் 35 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டவர்கள் பலர் அதனை மீறி வழமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இவற்றையடுத்தே இந்தப் பகுதி சுகாதாரப்பகுதியினரால் முடக்கப்பட்டது. முடக்கப்பட்ட பகுதியில் தும்பளை வீதியில் 3ஆம் குறுக்குத் தெரு தொடக்கம் மெத்தைகடைச் சந்தி, ஓடக்கரை வீதி, பருத்தித்துறை பஸ் நிலைய நுழைவாயில், பத்திரகாளி அம்மன் ஒழுங்கை,விநாயகர் முதலியார் (வி. எம்.) ஒழுங்கை, துறைமுகப் பகுதி – மூன்றாம் குறுக்குத் தெரு கடற்கரை பகுதி அடங்குகின்றன.
இதனால், இலங்கை போக்குவரத்து சபையின் பஸ் நிலையம், தனியார் பஸ் நிலையம், மரக்கறிச் சந்தை, மீன் சந்தை, வர்த்தக நிலையங்கள், அரச, தனியார் வங்கிகள் என்பனவும் முடங்கியுள்ளன.
வழமைபோன்று பஸ் சேவை!
பருத்தித்துறை பஸ் நிலையம் முடக்கப்பட்டபோதும் மருதடி பகுதியிலுள்ள இ.போ.ச. சாலையிலிருந்து வழமை போன்று பஸ் சேவைகள் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதி கோயிலடி முடக்கம்
இதேபோன்று, வல்வெட்டித்துறை -ஆதிகோயிலடிப் பகுதியும் நேற்று அதிகாலை 4 மணி முதல் முடக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் நேற்று முன்தினமும் 88 பேர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டனர். இதையடுத்தே, மக்கள் செறிந்து வாழும் இந்தப் பகுதி நேற்று அதிகாலை முதல் முடக்கப்பட்டது.
காவலில் படையினர்
முடக்கப்பட்ட பருத்தித்துறை நகரம், வல்வெட்டித்துறை – ஆதிகோவிலடிப் பகுதிகளில் பெருமளவான இராணுவத்தினர் கண்காணிப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
—————–
Reported by : Sisil.L