திருடப்பட்ட நூற்றுக்கணக்கான வாகனங்களை மோசடியாக மாற்றியமைத்து விற்றது தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, ஒன்ராறியோ மற்றும் சஸ்காட்செவனில் சர்வீஸ் ஒன்ராறியோ ஊழியர்கள் உட்பட 28 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
ஒன்ராறியோ மாகாண பொலிஸார் 2020 செப்டம்பரில், வாகனத் திருட்டு வலையமைப்பைக் கண்டுபிடித்த பின்னர், திருடப்பட்ட வாகனங்களின் அடையாள எண்களை தனியார் விற்பனை மூலம் விற்பனை செய்வதற்காக மாற்றியமைப்பதாகக் கூறப்படும் விசாரணையைத் தொடங்கியதாக வியாழக்கிழமை ஒரு செய்தி வெளியீட்டில் தெரிவித்தனர்.
இந்தத் திருட்டுகள் முக்கியமாக ஒன்ராறியோவில் நடந்ததாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
‘புராஜெக்ட் மைரா’ என்று பெயரிடப்பட்ட விசாரணையின் மூலம், 12 மில்லியன் டொலர் மதிப்புள்ள 214 வாகனங்களை மீட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.
அவற்றில் உயர்தர வாகனங்கள் உட்பட பலதரப்பட்ட திருடப்பட்ட வாகனத் தயாரிப்புகள் மற்றும் மாதிரிகள் மீட்கப்பட்டன.
மீட்கப்பட்ட வாகனங்களில் ஹொண்டா மற்றும் அகுரா 37 சதவீதமாகும்.
பீல் பிராந்தியத்தில் ஒன்று, டர்ஹாம் பிராந்தியம் மற்றும் ரொரண்டோவில் ஒன்று மற்றும் யோர்க் பிராந்தியத்தில் மற்றொன்று உட்பட திருட்டுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூன்று வாகனத் திருட்டு குற்றவியல் அமைப்புகளை பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
சர்வீஸ் ஒன்டாரியோவின் ஊழியர்கள் திருடப்பட்ட வாகனங்களை சட்டவிரோதமாக பதிவு செய்வதற்கு உதவியதாக குற்றம் சாட்டப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டனர்.
டொரண்டோ, பீல் பிராந்தியம், யோர்க் பிராந்தியம், வாட்டர்லூ மற்றும் சாஸ்கடூன் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒன்ராறியோ மாகாண பொலிஸார் மற்றும் பல பொலிஸ் படைகளின் அதிகாரிகள் மொத்தம் 44 தேடுதல் பிடியாணைகளை நிறைவேற்றினர்.
இந்தச் சோதனைகளில் மூலம் ஆறு துப்பாக்கிகள், 200 கிராமுக்கு மேல் சந்தேகத்திற்கிடமான ஃபெண்டானில் மற்றும் 1,840 கிராம் சந்தேகத்திற்குரிய கொகோயின் உட்பட பெருமளவிலான போதைப்பொருள்கள் மற்றும் பெருந்தொகைப் பணம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் 28 பேர் மீதும் குற்றவியல் சட்டம், கஞ்சா சட்டம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் மற்றும் பொருள்கள் சட்டம் தொடர்பான குற்றச்சாட்டுகள் உட்பட 242 குற்றங்களுக்கு குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவித்தனர்.
Reported by :Maria.S