130 வருடங்கள் பழமை வாய்ந்த நுவரெலியா தபால் நிலைய கட்டிடம் தொடர்பில் இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து தீர்மானங்களும் இடைநிறுத்தப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (09) தெரிவித்தார்.
150வது உலக தபால் தினத்தை முன்னிட்டு அலரி மாளிகையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
நுவரெலியா தபால் நிலையம், அந்த கட்டிடம் மற்றும் அதன் வளாகம் என்பன தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்கு மாத்திரமே பயன்படுத்தப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் விஜித ஹேரத்,
“நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை பலவந்தமாக கையகப்படுத்துவதற்கு அண்மையில் தீர்மானிக்கப்பட்டது.
புதிய அரசாங்கத்தின் புதிய ஜனாதிபதியின் கொள்கைகளுக்கு இணங்க, இனிமேல் தபால் திணைக்களத்தின் செயற்பாடுகளுக்காக நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தையும் அந்த காணியையும் ஒதுக்குகிறோம்.
அது வேறு யாருக்கும் கொடுக்கப்படாது. இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து முடிவுகளையும் நிறுத்தி வைக்கிறோம்” என்றார்.
ஹோட்டல் திட்டத்திற்காக நுவரெலியா தபால் நிலைய கட்டிடத்தை தனியாரிடம் கையளிக்கும் நடவடிக்கை தொடர்பில் அண்மைக்காலமாக அதிகளவில் பேசப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
Reported by:K.S.karan