தொழிலதிபர்கள் குழுவினருக்கு தங்கத்தை இறக்குமதி செய்ய அனுமதிப்பதன் மூலம் இலங்கையில் தங்கத்தின் விலைக் கட்டுப்பாட்டை இலங்கை மத்திய வங்கி இழந்து விட்டதாக அனைத்திலங்கை நகை உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது.
இந்தியா, சீனா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிலிருந்து தரமற்ற தங்கத்தை இறக்குமதி செய்வதன் மூலம் உள்ளூர் தொழில் துறையில் பெரும் தாக்கத்தை அது ஏற்படுத்தியுள்ளது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது. உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1800 டொலராக(ரூ.360,000) அதிகரித்துள்ளது. மேலும் இது உயரும் அபாயம் உள்ளது.
அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்புக் குறைந்துள்ளமை மற்றும் கொவிட் தொற்று நோயால் இலங்கையில் தங்கத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் உள்ளூர் தொழில் துறையைப் பாதுகாக்க அரசாங்கத்தின் தலையீடு அவசியம் என்று அனைத்திலங்கை நகை உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் மங்கள ஹர்ஷ குமார தெரிவித்தார்.
“முன்னதாக நாங்கள் மத்திய வங்கியுடன் வியாபாரம் செய்தோம். ஆனால் இப்போது சுமார் ஐம்பது புதிய தொழிலதிபர்கள் தங்கத்தை இறக்குமதி செய்வதில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் விலையைத் தீர்மானிக்கிறார்கள். இதன் காரணமாக சிறிய தங்க உற்பத்தியாளர்களுக்கு மிகவும் மோசமான நிலைமை எழுந்துள்ளது.இன்று ஒரு பவுண்ஸ் தங்கம் ஒரு இலட்சத்து பதினெட்டாயிரம் ரூபா. அவ்வாறாயின் இந்தத் தொழிலை நாங்கள் எவ்வாறு நடத்த முடியும்?”எனக் கேள்வியெழுப்பினார்.
—————
Reported by : Sisil.L