1990 ஆம் ஆண்டு இரண்டாவது மாவீரர் நாளையொட்டி நமது தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களால் இதே நாளில் தமிழீழத் தேசியக் கொடி பிரகடனம் செய்யப்பட்டதை மனதில் நிறுத்தி அத் தேசியக் கொடியை அதற்குரிய அனைத்து மரியாதைகளோடும் போற்றிக் கொண்டாடும் வகையில், 2021 ஆம் ஆண்டில் இருந்து ஒவ்வொரு வருடமும் நவம்பர் மாதம் 21 ஆம் நாளை, தமிழீழத் தேசியக் கொடி நாளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை பிரகடனம் செய்திருகின்றது.
உலகளாவிய ரீதியில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தால் ஒழுங்குசெய்யப்பட்ட நிகழ்வுகளில், கனடாவில் ஒரே நேரத்தில் ரொறன்ரோ,ஒட்டாவா, மொன்றியால் ஆகிய இடங்களில் தமிழீழத் தேசியக் கொடி நாள் சிறப்புற நடைபெற்றன. ரொறன்ரோவில் மங்கல விளக்கேற்றலுடன், கனடியதேசியக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி ஆகியன ஏற்றப்பட்டன. அதைத் தொடர்ந்து வரவேற்பு உரையை நாடுகடந்த தமிழீழ அரசாங்க மேலவை உறுப்பினர் திரு.சு.இராசரத்தினம் அவர்கள் வழங்கி இருந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர் திரு.கு.குமணன், முன்னாள் நகரசபை உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டளருமான திரு. நீதன் சாண், மற்றும் இளம் சமூக செயற்பாட்டளரும், வளர்ந்து வரும் வர்த்தகரும் திரு.கார்த்தி நந்தகுமார் ஆகியோர் உரைகளை நிகழ்த்தி இருந்தார்கள். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களின் உரையின் காணொளியும், ரொறன்ரோ கல்விச்சபை உறுப்பினர் யாழினி இராஜகுலசிங்கம் அவர்களின் உரையின் காணொளியும் காண்பிக்கப்பட்டிருந்தது. அத்துடன் கவிதை, நடன நிகழ்வுகளும் இடம்பெற்றன நாடுகடந்த தமிழீழ அரசாங்க. கனடாப் பணிமனை உப பொறுப்பாளர் திரு. டேவிட் தோமஸ் அவர்கள் நன்றி உரையினை ஆற்றி இருந்தார்.
ஒட்டாவாவில் சிறப்பாக அங்குள்ள தமிழ்சார் பத்து அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு மங்கல விளக்கேற்றி தேசியக் கொடிகள் ஏற்றபட்டன. சிறப்பு நிகழ்ச்சியாக கொடியின் அத்தியாவசியம், மகத்துவம் என்பன சிறப்புரைகளாக பல்கலைக்கழக மாணவிகளால் ஆற்றப்பட்டது. அத்துடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு.வி.உருத்திரகுமாரரின் தமிழீழத் தேசியக் கொடி நாளும் அதன் அவசியமும் என்ற பேச்சு வாசிக்கப்பட்டது. இவ் அனைத்து நிகழ்வுகளையும் இளைய மாணவ சமுதாயமே முன்னின்று நடத்தியது குறிப்பிடவும்,பாராட்டுக்கும் உரியது.
மொன்றியலில் மங்கல விளக்கேற்றி, கனடியத்தேசியக் கொடி. கியூபெக் மாநிலக் கொடி, தமிழீழத் தேசியக் கொடி ஆகியன ஏற்றப்பட்டன. அத்துடன் கவிதை,பேச்சு, தாயகப் பாடல்கள் என மிகவும் எழுச்சியுடன் நடைபெற்றது.
—
Shanthini Sivaraman