நல்லூர் ஆலய வளாகத்தில் சிறுவர்-பெண்களை ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தியோர் கைது

நல்லூர் சுற்றாடல் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


அதேவேளை இவர்களிடம் இருந்து கைக்குழந்தை ஒன்றும் ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.


அதில் கைக்குழந்தையை தாயுடன் இருக்க அனுமதித்த நீதவான் ஏனைய 6 சிறுவர்களும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.


நல்லூர் ஆலயச் சூழல் மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.


அதில் நல்லூர் பகுதியில் ஆலயத்துக்கு வருவோருக்கு ஊதுபத்தி விற்பனை என இடையூறு விளைவிக்கும் முகமாக சிலர் நடந்து கொண்டனர்.


இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.


விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் வெளி மாவட்டங்களில் இருந்து குழுக்களாக வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியிலுள்ள விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் எனத் தெரியவந்துள்ளது.


இந்நிலையில் புதன்கிழமை இரவு யாழ்ப்பாணப் பொலிஸார் குறித்த விடுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.
அதன் போது ஊதுபத்தி விற்பனைக்கு என அழைத்து வரப்பட்ட 3 பெண்கள், கைக்குழந்தை ஒன்று, 6 சிறுவர்கள், ஆண் ஒருவர் மற்றும் இவர்களை வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர் ஆகியோரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.


பொலிஸ் நிலையத்தில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் அவர்களை முற்படுத்தினர்.


அதனை அடுத்து நீதவான், விடுதி உரிமையாளர், ஆண் ஒருவர் மற்றும் 3 பெண்கள் ஆகியோரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் தடுத்து வைக்க உத்தரவிட்டதுடன், கைக்குழந்தையையும் தாயுடன் இருக்க அனுமதித்தார்.


இதேவேளை 6 சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்களிடம் ஒப்படைக்க நீதிமன்றில் முற்படுத்தப்படும் வரை சிறைச்சாலை உத்தியோகஸ்தர்கள் கண்காணிப்பில் வைத்திருக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *