புத்தளம் – கற்பிட்டி உச்சிமுனை தீவில் விஸ்தரித்து புதுப்பிக்கப்பட்டுள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் இன்று(23) திறந்து வைக்கப்பட்டது.
தமிழகத்திலிருந்து கொண்டுவரப்பட்ட அன்னை வேளாங்கண்ணியின் திருச்சொரூபம் இந்த தேவாலயத்திற்கு இன்று(23) கடல் வழியாக கொண்டு செல்லப்பட்டது.
கற்பிட்டி புனித மரியாள் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னை வேளாங்கண்ணியின் திருச்சொரூபத்தை உச்சிமுனை நோக்கி கொண்டுசெல்வதற்கான பவனி இன்று(23) காலை ஆரம்பமானது.
கற்பிட்டி கடல் வழியாக அன்னை வேளாங்கண்ணியின் திருச்சொரூபம் அலங்கரிக்கப்பட்ட படகுகளின் பவனியாக அழகிய உச்சிமுனையிலிருக்கும் அன்னை வேளாங்கண்ணியின் தேவாலயம் நோக்கி கொண்டு செல்லப்பட்டது.
படகுப் பவனியில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் இணைந்திருந்தனர்.
உச்சிமுனையை சென்றடைந்த திருச்சொரூபம், தேவாலயத்தில் வைக்கப்பட்டதுடன் அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் சிலாபம் மறைமாவட்ட ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகையால் திறந்து வைக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து சிலாபம் மறைமாவட்ட ஆயர் வெலன்ஸ் மென்டிஸ் ஆண்டகை, கண்டி மறைமாவட்டத்தின் ஓய்வு பெற்ற ஆயர் வியானி பெர்னாண்டோ ஆண்டகை மற்றும் கற்பிட்டி பங்குத் தந்தை அருட்தந்தை சம்பத் பிரசங்க பெரேராவினால் விசேட திருப்பலியும் ஒப்புகொடுக்கப்பட்டது.
திருப்பலியின் இறுதியில் அன்னை வேளாங்கண்ணியின் திருச்சொரூப ஆசீர்வாதமும் அளிக்கப்பட்டது.
இன்றைய விசேட திருப்பலியில் தமிழ்நாடு அன்னை வேளாங்கண்ணி தேவாலய அதிபர் அருட்தந்தை இருதயராஜ், அருட்தந்தை ஆரோக்கிய ஸ்டீபன்ராஜ் மற்றும் இலங்கையின் அருட்தந்தையர்களும் அருட்சகோதரிகளும் பங்குபற்றியிருந்தனர்.
அன்னை வேளாங்கண்ணியின் ஆசியைப் பெற்றுக் கொள்வதற்காக பெருமளவிலான பக்தர்கள் வருகை தந்திருந்தமை சிறப்பம்சமாகும்
Reported by :S.Kumara