இலங்கையில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த வருடத்தில் 23,118 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்பாளரான வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்தார்.
டெங்கு நோய் பரவுவதை தடுக்கும் வகையில் நுளம்புகள் பெருகும் இடங்களை அழிப்பதை உறுதி செய்யுமாறு டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதேவேளை டெங்கு காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணத்தில் 5 வயது சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
உடுவிலைச் சேர்ந்த பரசுதன் யோயிதா (வயது-5) என்ற சிறுமியே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணத்தில் கடந்த ஒரு வாரத்தில் இரண்டாவது சிறுவர் டெங்குக் காய்ச்சலினால் உயிரிழந்துள்ளார்.
கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வைச் சேர்ந்த 11 வயதுச் சிறுவன் டெங்குக் காய்ச்சலால் கடந்த சனிக்கிழமை உயிரிழந்தார்.
காய்ச்சல் ஏற்பட்டால் நேரடியாக அருகிலுள்ள அரச மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத் துறை வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
Reported by:Anthonippillai.R