G77 + சீனா அரச தலைவர்கள் உச்சிமாநாட்டில் உரையாற்றுவதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (13) காலை கியூபா பயணமாகியுள்ளார்.
“தற்போதைய அபிவிருத்தி சவால்களில் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் பங்கு” என்ற தலைப்பில் “G77 மற்றும் சீனா” அரச தலைவர்கள் மாநாடு (G77+China Leaders’ Summit) 2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் கியூபாவின் ஹவானாவில் நடைபெறவுள்ளது.
கியூபா ஜனாதிபதி மிகயெல் டயஸ்-கனெலின் (Miguel Diaz-Canel) உத்தியோகபூர்வ அழைப்பையடுத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க G77 + சீனா அரச தலைவர்களின் உச்சி மாநாட்டில் பங்கேற்கவுள்ளார்.
இந்த அரச தலைவர் உச்சி மாநாட்டுடன் இணைந்ததாக இலங்கை மற்றும் கியூபா இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் மேம்படுத்தும் நோக்கில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் கியூபா ஜனாதிபதிக்கும் இடையில் இருதரப்பு பேச்சு வார்த்தையும் நடைபெறவுள்ளது.
மேலும், ஜனாதிபதி வெளிநாட்டிலிருக்கும் காலப்பகுதியில் ஜனாதிபதியின் கீழுள்ள அமைச்சுக்களை கண்காணிப்பதற்காக பதில் அமைச்சர்கள் நால்வர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதற்கமைய ஜனாதிபதி நாடு திரும்பும் வரையான காலப்பகுதி வரை அமுலாகும் வகையில்,
1. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரான பிரமித்த பண்டார தென்னகோன் – பாதுகாப்பு பதில் அமைச்சராகவும்
2. நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய – நிதி மற்றும் பொருளாதர நிலைப்படுத்தல், தேசிய கொள்கைகள் பதில் அமைச்சராகவும்
3. தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் – தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும்
4. சமூக வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் – சிறுவர், மகளிர் விவகார மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
Reported by :S.Kumara