ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆளுங்கட்சியின் தலைவர்கள் இன்று(14) சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
இன்று மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இவர்கள் சந்திக்கவுள்ளதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேச்சாளரொருவர் கூறினார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உள்ளிட்ட அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சித்தலைவர்களுக்கு ஜனாதிபதி செயலகத்தினால் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
அரசாங்கத்தினால் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் போது ஏற்படும் சிக்கல்கள் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் குறித்தும் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் நோக்கமாகவுள்ளது.
ஜனாதிபதியினால் நேற்றுமுன்தினம் (12) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பொதுஜன பெரமுனவின் மாவட்ட தலைவர்கள் பங்கேற்கவில்லை.
தமது கட்சியின் மாவட்ட தலைவர்களை அழைப்பதாயிருந்தால் அதனை கட்சிக்கு அறிவித்து செயற்படுமாறு ஸ்ரீலங்கா பொதுஜ பெரமுன ஜனாதிபதிக்கு ஏற்கனவே கூறியுள்ளது.
இவ்வாறான சூழலில் தமது கட்சியின் மாவட்ட தலைவர்களை ஜனாதிபதி செயலகத்தின் ஊடாக கூட்டத்திற்கு அழைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதெனும் பொதுஜன பெரமுனவின் நிலைப்பாட்டின் காரணமாகவே ஜனாதிபதியினால் அழைப்பு விடுக்கப்பட்ட கூட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் கலந்துகொள்ளவில்லை என கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், இன்றைய சந்திப்பு தொடர்பாக அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து கட்சிகளின் தலைவர்களுக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது
.Reported by :S.kumara