சுயஸ் கால்வாய் மூலமான வருமானம் அதிகரிப்பு

எகிப்தின் மிக முக்கிய வருவாய் ஆதாரமாக சுயஸ் கால்வாய் திகழ்ந்து வருகிறது.


இந்தக் கால்வாய் மூலம் 2021 ஜூலை மாதம் முதல் 2022 ஜூன் மாதம் வரை, எகிப்து அரசாங்கத்துக்கு கடந்த 135 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சுமார் 7 பில்லியன் டொலர் வருமானம் கிடைத்துள்ளது.


கடந்த வருமானத்தை விட இது 20.7 சதவீதம் அதிகம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


கடந்த ஆண்டு சுயஸ் கால்வாயில் ‘எவர்கிரீன்’ என்ற சரக்குக் கப்பல் அகப்பட்டுக் கொண்டதால் சுமார் ஒரு வாரத்துக்கு கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


இதனால் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரம் கோடி டொலர் வர்த்தக இழப்பு ஏற்பட்டது. 2021-22 ஆம் ஆண்டில் 13 லட்சம் தொன் சரக்குகள் சுயஸ் கால்வாய் வழியாகச் சென்றுள்ளன.


இது 2020-21 ஆம் ஆண்டைக் காட்டிலும் 10 சதவீதம் அதிகம் ஆகும். சர்வதேச அளவில் பெற்றோலிய பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், சுயஸ் கால்வாய் வழியாக பொருட்களை கொண்டு செல்லும் போது செலவுகள் குறையும் என்பதால் ஏற்றுமதியாளர்கள் அதனை தேர்வு செய்வதாகக் கூறப்படுகிறது.


கொரோனா தொற்று, ரஷ்யா – உக்ரைன் மோதல் ஆகிய காரணங்களால் எகிப்தின் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையத் தொடங்கிய நிலையில், சுயஸ் கால்வாயின் வருவாய் அதிகரித்துள்ளதால், கால்வாயை மேம்படுத்தும் விதமாக 400 கோடி டொலர் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை அந்நாட்டு அரசு தொடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Reported by :Maria.S

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *