வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணக் கடமைகளை நிறைவுசெய்து வீடு திரும்பிக்கொண்டிருந்த அதிகாரி ஒருவர், இரத்தினபுரி – குருவிட்ட பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட்டு, உயிரிழந்தாக அனர்த்த முகாமைத்துவ மையம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி – கிரியெல்ல பகுதியில் நிவாரணப் பணியில் ஈடுபட்ட ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சீரற்ற காலநிலை காரணமாக, 6 மாவட்டங்களில் 144 குடும்பங்களைச் சேர்ந்த 576 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்ட இரத்தினபுரி, களுத்துறை, கம்பஹா மற்றும் காலி ஆகிய மாவட்ட மக்களுக்கு, மாவட்ட செயலாளர்கள் ஊடாக நிவாரணங்களை வழங்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார். இதற்கான நிதியை மாவட்ட செயலாளர்களுக்கு வழங்குமாறும் அவர் திறைசேரிக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்காக கடற்படையின் 13 நிவாரணக்குழுக்கள் பாதிப்புக்குள்ளான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
Reported by:Anthonippillai.R