சிறுவர் மற்றும் பெண்கள் மீது மேற்கொள்ளப்படும் துஷ்பிரயோகத்தைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக, 22.07.2021 இன்றைய தினம் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறிப்பாக அண்மையில் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதீனின் வீட்டில் பணிப்பெண்ணாகப் பணியாற்றி தீக்காயங்களுக்குள்ளாகி உயிரிழந்த ஹற்றன் டயகம சிறுமி கிஷாலினியின் இறப்பிற்கான நீதியை முன்னிறுத்தி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதேவேளை இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுமி கிஷாலினியின் இறப்பிற்கு நீதி கோரும் வகையிலான பதாதைகளைத் தாங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதுடன், பெண்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதற்கு எதிரான பதாதைகள் மற்றும் சிறுவர்கள், வேலைக்கு அமர்த்தப்படுதல், துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கப்படுதல் என்பவற்றைக் கண்டிக்கும் வகையிலான பதாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் குறித்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறீஸ்கந்தராசா, முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன், முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் தலைவர் மரிய சுரேஸ் ஈஸ்வரி, சூழலியல் மற்றும் சமூக அபிவிருத்திக்கான நிறுவனப் பிரதிநிதிகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Reported by : Sisil.L