அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவர் சந்திரவன்ச பதிராஜாவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்த வழக்கு தொடர்பாக அமைச்சர் விஜித ஹேரத் இன்று (05) கொழும்பு உயர் நீதிமன்றத்தில் சாட்சியமளித்தார்.
கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அமைச்சர் சாட்சியமளித்திருந்தார்.
அப்போது சாட்சியமளித்த அமைச்சர் விஜித ஹேரத், ஒரு மக்கள் பிரதிநிதியாக, பொதுமக்களிடமிருந்தும் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தகவல்கள் வழங்கப்படுவதாக கூறினார்.
அவ்வாறு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த வழக்கு தொடர்பாக 2015ஆம் ஆண்டு இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
பொதுச் சொத்துக்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் நோக்கில் தான் முறைப்பாடு சமர்ப்பித்ததாகக் கூறிய அமைச்சர் விஜித ஹேரத், அவை குறித்து விசாரணைகளை நடத்தி பொறுப்பான நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது விசாரணை நிறுவனங்களின் பொறுப்பு என்றும் கூறினார்.
பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 4 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அபிவிருத்தி லொத்தர் சீட்டுகளின் விளம்பரத்தை தனியார் நிறுவனங்களுக்கு மாற்றியதில் அரசாங்கத்திற்கு நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறி, அபிவிருத்தி லொத்தர் சபையின் முன்னாள் தலைவருக்கு எதிராக, கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது இந்த வழக்கு தொடரப்பட்டது.